​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

Published : Jul 07, 2019 11:16 AM



சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

Jul 07, 2019 11:16 AM

ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நடராஜருக்கு 6 மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். இதில் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும் திருத்தேர் வீதி உலா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த இரு விழாக்களின் போதும் மூலவரே தேரில் எழுந்தருள்வார்.

அந்த வகையில், கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கிய ஆனித் திருமஞ்சனத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாக சுந்தரி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய ஐவரும் தனித்தனித் தேர்களில் வலம் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து மனமுருக வழிபட்டு வருகின்றனர்.


தேர்கள் செல்லும் வழிகளெல்லாம், பெண்கள் வண்ணக் கோலமிட்டு வரவேற்பு அளிக்கின்றனர். மறுபுறம், பெண்களின் பரதநாட்டியம் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை திருதேர் ரதமண்டபத்திற்கு வந்தடையும். அங்கு சமகால லட்சார்ச்சனை என்ற சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டுள்ளனர்.

தேர்கள் வரும் வழியெங்கும், விதவிதமான இசை வாத்தியங்கள் முழங்கின. சிவன், பார்வதி வேடமிட்ட பக்தர்கள், வாத்தியங்கள் இசைக்கப்படும் வேகத்திற்கேற்ப பரவசத்துடன் நடனமாடினர்.