​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிப்பு

Published : Jul 07, 2019 6:29 AM



சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிப்பு

Jul 07, 2019 6:29 AM

ஐந்து மாதங்களுக்கு முன் மாயமான, சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். காட்பாடியில் ஒப்படைக்கப்பட்ட அவரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிகாலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூரில் மாயமானார்.

முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்ததில், எழும்பூர் ரயில்நிலையத்திற்கு முகிலன் வந்து- பின்னர் வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.

முகிலன் மாயமாகி 150 நாட்கள் கடந்த நிலையில், திருப்பதியில் அவரை பார்த்ததாக பள்ளித் தோழர் ஒருவர் முகிலன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதனிடையே, திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அழைத்துச் சென்ற வீடியோ வெளியானது.

இதையடுத்து தமிழக போலீசார் ஆந்திர போலீசாரை தொடர்பு கொண்டு தங்களிடம் முகிலனை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது முகிலனை விடுவிக்கக்கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

காட்பாடியில் இருந்து முகிலனை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று அதிகாலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர். முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஈரோட்டில் இருந்து முகிலனின் மனைவி பூங்கொடி வந்த கார், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கியது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சாலை அருகே காரின் வலது முன்பக்க டயர் வெடித்ததில் கார் சென்டர் மீடியனில் மோதி நின்றது. இதில் காருக்கு லேசான சேதம் ஏற்பட்ட நிலையில் பூங்கொடி உட்பட காரில் இருந்த 5 பேருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.