பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் தனிநபர் கடன், வீட்டு வாசலிலேயே வங்கி சேவை, ஒரு பொதுத்துறை வங்கியின் வாடிக்கையாளர் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் சேவையைப் பெறுவதற்கான திட்டம் போன்றவற்றையும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாராக்கடன் பிரச்சினையில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வானளாவிய அதிகாரங்கள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை வாராக்கடன் தொடர்புடைய நடவடிக்கைகள் அதற்காக அமைக்கப்பட்ட வாரியத்தின் கீழ் செயல்பட்டு வந்தன.
ரிசர்வ் வங்கி தக்க நேரத்தில் தலையிட்டிருந்தால், பல்வேறு கடன் மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து கூறியிருந்த நிலையில் தற்போது கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதலான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.