​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் சேகரிப்பு திட்டம்..! களத்தில் இறங்கிய MLA

Published : Jul 05, 2019 8:41 PM



மழைநீர் சேகரிப்பு திட்டம்..! களத்தில் இறங்கிய MLA

Jul 05, 2019 8:41 PM

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் தொகுதி முழுவதும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க அரசு அதிகாரிகளை எதிர்பார்க்காமல், எம்எல்ஏ ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்...

நகரங்களில் பெய்கின்ற குறைந்த மழை நீரும் நிலத்திற்குள் செல்லாததற்கான காரணம் குறித்து இப்படி விவரிக்கிறார் சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன்.

முன்பெல்லாம் குடிநீர் வாரியத்தால் வினியோகிக்கப்படும் தண்ணீர் தடை ஏற்படும் போது வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் கைகொடுத்தன , ஆனால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால் பல பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளும் கைகொடுப்பதில்லை. எனவே தான் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க மழைநீர் சேரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...

அரசு நடவடிக்கைகளுக்கு காத்திருக்காமல் , தொகுதி நலன் கருதி சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க நேரடியாக களத்தில் இறங்கியுள்ள மா.சுப்ரமணியன் முதற்கட்டமாக சைதாப்பேட்டை முழுவதும் ஆயிரம் மழைநீர் சேரிப்பு தொட்டிகள் அமைக்கவுள்ளதாக கூறுகிறார்.

மேலும் துவக்கத்தில் பொதுமக்களிடம் பெரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும் ஓரிரு வீடுகளில் பணிகளை துவங்கிய பின்னர் மற்றவர்களும் தாமாக முன்வந்து தங்களது தெருக்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க கோரி ஆர்வத்துடன் கேட்பதாகவும் கூறுகிறார் மா.சுப்ரமணியன்.

வீட்டு மாடிகளில் விழும் மழைநீர் மட்டுமின்றி சாலையில் தேங்கும் மழைநீரில் சிறு அளவும் அந்த தொட்டி வழியாக பூமிக்குள் செல்லும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , ஒவ்வொரு மழைநீர் சேகரிப்பு தொட்டியும் 18 அடி ஆழம் கொண்டது எனவும் விவரிக்கிறார் மா.சுப்ரமணியன் .

பின்னர், மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை துவங்கி வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

சைதாப்பேட்டையில் ஆற்றோரம் உள்ள பகுதிகளில் மட்டும் தான் 100 அடி ஆழத்தில் தண்ணீர் வருவதாகவும் ஆனால் பல பகுதிகளில் 300 அடி ஆழத்தில் தான் தண்ணீர் வருவதாக வருத்தமடையும் மா.சுப்ரமணியன் , மழைநீர் சேகரிப்பு விவகாரத்தில் அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்.

அதளபாதாளத்தில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் அரசின் நடவடிக்கைகள் மட்டுமே தீர்வுகள் கொடுத்துவிடாது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, பொதுமக்களும் மற்ற தொகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் மழைநீர் சேகரிப்பை தங்களது பகுதிகளில் தீவிரப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் தண்ணீருக்குத் திண்டாடும் நிலை ஏற்படாது...