​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதல் திருமணம் செய்த ஜோடி மூன்றே மாதத்தில் படுகொலை

Published : Jul 04, 2019 11:21 AM

காதல் திருமணம் செய்த ஜோடி மூன்றே மாதத்தில் படுகொலை

Jul 04, 2019 11:21 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இளம் தம்பதியினர், வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் பகுதியை சேர்ந்த சோலை ராஜ் என்பவர், அதே பகுதியிலுள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே உப்பளத்தில் விளாத்திகுளம் அடுத்த பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணும் வேலைபார்த்து வந்துள்ளார்.

சோலை ராஜும், ஜோதியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்க தொடங்கிய நிலையில், அவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாயினும், வெவ்வேறு உட்பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜும், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சோலைராஜின் குடும்பத்தினர் இளம் தம்பதியினரை ஏற்றுக் கொண்ட நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் சோலைராஜ், ஜோதிமணி ஆகியோர் வீட்டை வெளியேவராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, குளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்களை எடுக்க சோலைராஜின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் சோலை ராஜின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.

மேலும் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவுள்ள நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, சோலைராஜின் உறவினர்களும், அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு உடல்களை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தந்தை அழகரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.