​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி - முதலமைச்சர் பழனிசாமி

Published : Jul 01, 2019 4:40 PM



50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி - முதலமைச்சர் பழனிசாமி

Jul 01, 2019 4:40 PM

50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்திலே நிலவுகின்ற காலகட்டத்தில், அதிமுக அரசு மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, தண்ணீர் பிரச்சனையை எழுப்பி பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்ட ராகுல்காந்திக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கேட்டார்.

ராகுல்காந்தி கர்நாடகத்திலே பேசுகின்ற போது, காங்கிரஸ் மத்தியிலே ஆட்சி அமைந்தவுடன் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும், காவேரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று சொன்னார்களே, இதுவரை ஒரு குரல் கொடுத்திருக்கிறீர்களா நீங்கள்? இப்போது அரசை பற்றி இவ்வளவு விமர்சனம் செய்கிறீர்கள்.

இப்பொழுது காவேரி மேலாண்மை ஆணையம் இருமுறை கூட்டப்பட்டு, நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முறையாக காவேரி மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியும் கூட நமக்கு மாதந்தோறும் விடுவிக்க வேண்டிய அந்த தண்ணீரை கர்நாடக அரசு இதுவரைக்கும் திறக்கப்படவில்லை. அதற்காக ஏதாவது பதில் கொடுத்தீர்களா? ஆனால் அரசை குறை சொல்கிறீர்கள்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், சீரான குடிநீர் விநியோகம் செய்திட அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அரசை பொறுத்தவரை ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் முழுவதும் இப்பொழுதும் வழங்கி கொண்டு இருப்பதாக முதலமைச்சர் கூறினார்.

பின்னர், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறிய ராமசாமி, இதற்காக தனி குழு அமைத்து அதில் எதிர்கட்சி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்றார். இது அனைவருக்குமான பிரச்சனை என்று கூறிய முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது தான் தன்னுடைய கேள்வி என்று குறிப்பிட்டார்.