​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற IAS அதிகாரி சந்தானம் விசாரணை

Published : Apr 19, 2018 5:58 PM

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற IAS அதிகாரி சந்தானம் விசாரணை

Apr 19, 2018 5:58 PM

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை மேற்கொண்டார். 

விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில் சந்தானம் இன்று மதுரை சென்றார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தனது முதல்கட்ட  விசாரணையைத் தொடங்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை, பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார். தான் கூறியபடி நடந்து கொண்டால் பல்கலைக்கழக தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருவதாக மாணவிகளிடம் நிர்மலா தேவி கூறியிருந்தார்.

இதனால் நிர்மலா தேவிக்கும் - பல்கலைக்கழகத்திற்கும் என்ன தொடர்பு? நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி சந்தானம் துணைவேந்தர் செல்லத்துரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் கேட்டறிந்ததாக  கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சந்தானம் அருப்புக்கோட்டை செல்லவுள்ளதாகவும், அங்கு மாணவிகள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று அதிகாரி சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே விசாரணை அதிகாரி சந்தானத்துக்கு உதவியாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக பேராசிரியையான கமலியும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் சந்தானத்துடன் இணைந்து, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிப்பார்.

விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி சந்தானம், நாளை முதல் அருப்புக்கோட்டையில் விசாரணை நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிப்பதே தமது விசாரணை வரம்பு எனவும் சந்தானம் கூறினார்.