​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்பு

Published : Jun 29, 2019 7:41 AM

ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்பு

Jun 29, 2019 7:41 AM

ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி 20 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுகளில் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று மோடி கூறிய யோசனையை டிரம்ப் வரவேற்றுள்ளார். இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

முதல் நாள் அமர்வுகளில் பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மனிதகுலத்திற்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகளை தனிமைப்படுத்தவும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடவும் மோடி அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பிற்பகலில் ரஷ்ய அதிபர் புதின்-சீன அதிபர் சீ ஜின்பிங் உள்ளிட்டோருடன் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தீவிரவாதம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. மூன்று நாடுகளும் தீவிரவாதத்தை முழு மனத்துடன் கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த சந்திப்பு முக்கிய சர்வதேச பிரச்சினைகளை விவாதிப்பதற்கு பயனுள்ளதாக அமைந்தது என்று மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவூதிபட்டத்து இளவரசர் , தென்கொரியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

 

இரண்டாவது நாளான இன்று காலை மகளிர் தொழில் முன்னேற்றம் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகரான இவானா டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்களுக்கு நிகராக உலகில் பெண்களுக்கான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் இவானா வலியுறுத்தியுள்ளார்.