​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதி

Published : Jun 28, 2019 2:59 PM



வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதி

Jun 28, 2019 2:59 PM

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதிபூண்டுள்ளதாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதேபோல, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் கூட்ட அரங்கிற்கு வந்த தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கொண்டனர்.

சீன அதிபர் ஜின்பிங் பேசும்போது, சுதந்திர, சர்வதேச வர்த்தகத்திற்கு மாறாக, சில வளர்ந்த நாடுகள் வர்த்தக காப்புக் கொள்கைகளை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் போக்கால் உலக வர்த்தக ஒழுங்கு சீர்குலைவதாகவும், உலக நாடுகளின் பொதுவான நலன்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உலகளவில் அமைதி, நிலைத்தன்மைக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக சீன அதிபர் ஜின்பிங் கூறினார். பலதரப்பு வர்த்தக விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் வலியுறுத்தினர்.

உலக வர்த்தக கழகத்தின் சீர்குலைக்க நடைபெறும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என புதின் கூறினார்.

உலக வர்த்தக கழகத்தை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், 5ஜி நெட்ஒர்க்குகளின் நெகிழ்வுத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

டிஜிட்டல் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும், அறிவுசார் சொத்துடமை பாதுகாப்பை மீறும் கொள்கைகளை அமெரிக்கா எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் டேட்டாக்களை உள்நாட்டிலேயே பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என சில நாடுகள் கூறுவதை அமெரிக்கா எதிர்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

ஜி-20 மாநாட்டின் இந்த முதல் அமர்வுக்குப் பிறகு, தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. கறுப்பு பண புழக்கம், வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்குவது உலகளாவிய சவாலாக இருப்பதாகவும், இது பொருளாதாரம், வளர்ச்சியை பாதிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகக் காப்புக்கொள்கைகள் உலக வர்த்தக கழகத்தின் சாராம்சத்திற்கு எதிரானவை என்றும், வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.