​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை - உயர்நீதிமன்றம்

Published : Jun 26, 2019 12:54 PM

சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை - உயர்நீதிமன்றம்

Jun 26, 2019 12:54 PM

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என  சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.

அப்போது, பேனர்கள் அச்சிடுவதை தடுக்க அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் வேலை இல்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் வைக்கும் பேனர்களை தினந்தோறும் பார்க்க முடிகிறது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து விளக்கமளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.