​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திப்பு

Published : Jun 26, 2019 12:40 PM



பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திப்பு

Jun 26, 2019 12:40 PM

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.

ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னோட்டமாக, மைக் பாம்பியோவின் வருகை அமைந்திருக்கிறது. நேற்றிரவு தலைநகர் டெல்லிக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரவு நட்சத்திர விடுதியொன்றில் தங்கிய மைக் பாம்பியோ, இன்று காலை 10.15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

 

இரண்டாவது முறையாக பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்க தரப்பிலிருந்து நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

மைக் பாம்பியோ- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, இந்தியா-அமெரிக்கா இடையே, பல்வேறு மட்டத்தினாலான உறவுகள் குறித்து பேசப்பட்டதாக, வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலை சந்திப்பதற்காக, செளத் பிளாக்கிற்கு வருகை புரிந்தார். அலுவலக வாசலில் வந்து, மைக் பாம்பியோவை, அஜீத் தோவல் வரவேற்று அழைத்துச் சென்றார்.

 

மைக் பாம்பியோ - அஜீத் தோவல் இடையிலான சந்திப்பின்போது, தீவிரவாத பிரச்சினை, பாதுகாப்பு மேம்பாடு, ஆயுத கொள்முதல் உள்ளிட்டவை குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜீத் தோவலுடனா சந்திப்பை நிறைவு செய்த, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சவுத் பிளாக் அலுவலகத்திலிருந்து, ஜவஹர்லால் நேரு பவனுக்கு வந்தார். அங்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். 

மைக் பாம்பியோ - ஜெய்சங்கர் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா பெற வேண்டாம் என்பதை நேரிடையாக சொல்லாமல் அமெரிக்காவை போன்று, இந்தியாவும், தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள கூடிய ஆற்றல் பெற்ற நாடு என்றார். இந்திய-அமெரிக்க வர்த்தக உறவில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் குறித்து பேசிய மைக் பாம்பியோ, இருநாடுகளும், ஒன்றுகொன்று விட்டுக்கொடுத்து, மனமொத்து பணியாற்றினால், பிரச்சினை தீர்வதோடு, பரஸ்பர உறவின் அடித்தளம் மேலும் பலப்படும் என்றார்.

அப்போது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றம் குறித்து, மைக் பாம்பியோவுடன் பேசியதாகத் தெரிவித்தார். பன்னாட்டு அளவிலான எரிபொருள் தேவை கணிக்க முடியாத ஒன்றாக இருப்பதால், ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா புரிந்துகொள்ளும் என நம்புவதாகவும், ஜெய்சங்கர் தெரிவித்தார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதில் இந்தியா திட்டவட்டமாக இருப்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு நாடும், பல்வேறு நாடுகளோடு நட்பு பாராட்டும் என்றும், அதில், ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும் என்றும், அவர்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கும் எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அவ்வாறு, ஒவ்வொரு நாடும், அவரவர் தேச நலனுக்கு எது உகந்ததோ அதை செய்யும் என்றும், ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான், நிதி உதவி அளிப்பதை அனைத்து நாடுகளும் நன்கு உணர்ந்திருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டினார். ஈரான் மீதான அந்த கருத்தில், இந்தியாவிற்கு உடன்பாடில்லை என ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறினார்.