​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை இன்று தொடக்கம்

Published : Apr 19, 2018 11:22 AM

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை இன்று தொடக்கம்

Apr 19, 2018 11:22 AM

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த  விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையை தொடங்குகிறது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தினர்.

 

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்திருந்தார். முதற்கட்ட விசாரணையை தொடங்கும் சந்தானம் குழு, இன்று மதுரை செல்கிறது. நிர்மலா தேவியின் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்வதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளை தனித்தனியாகயும் விசாரணை நடத்த உள்ளது. நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.

 

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி, நேற்றே விசாரணையை தொடங்கியது. விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம், நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கும் சிபிசிஐடி, நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

 

இதனிடையே, மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து, இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.