​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலத்தடி நீரும் வற்றியது.... காய்ந்த பயிர்கள்

Published : Jun 25, 2019 8:52 AM



நிலத்தடி நீரும் வற்றியது.... காய்ந்த பயிர்கள்

Jun 25, 2019 8:52 AM

டலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நெற்பயிர்கள் காய்ந்து கால்நடைகளுக்கு உணவாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் விவசாயத்திற்கும் தண்ணீரின்றி விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. மின் மோட்டார்கள் மூலம் விளை நிலங்களுக்கு பாய்ச்சும் தண்ணீரை நம்பித்தான் இந்த பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

விளைநிலத்தில் இயங்கும் மின்மோட்டரின் தண்ணீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் சரிவர வழங்காத நிலையில், மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விளை நிலங்களுக்கும் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

இதனால் நெற் பயிர்கள் காய்ந்து, பச்சை பசேலென காட்சி அளிக்கக் கூடிய விளைநிலங்கள் வெடித்து வறண்ட பாலைவனமாக மாற துவங்கிவிட்டன. 

விருதாச்சலத்தை சுற்றியுள்ள சாத்துக்கூடல், இளமங்கலம், ஆலிச்சிக்குடி, மணவாளநல்லூர் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகி உள்ளது.

வேறு வழியின்றி விவசாய விளை நிலங்களில் மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பயிர்கள் கருகியதால் நட்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள், இதே நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்தனர்.