​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

Published : Jun 23, 2019 5:46 PM

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

Jun 23, 2019 5:46 PM

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை.

நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர் சங்கத் தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்தது.

image

3171 பேர் வாக்களிக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு இணை ஆணையர் தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், திரையுலக மற்றும் நாடக நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை செலுத்தத் தொடங்கினர்.

image

நடிகர் ஆர்யா, மிதிவண்டிப் பயிற்சி முடித்த கையோடு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

image

சரண்யா, பொன்வண்ணன், ரமேஷ்கண்ணா, சின்னி ஜெயந்த், சார்லி, சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராம்கி, மோகன், விதார்த் ஆகியோரும் வாக்களித்தனர்.
பழம்பெரும் நடிகைகளான சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, கே.ஆர். விஜயா ஆகியோரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தனர்.

ராதா, அம்பிகா, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வடிவுக்கரசி, ரேகா ஆகியோர் வாக்களித்தனர். நடிகைகள் மீனா, ரித்விகா, ஊர்வசி, சங்கீதா, நிக்கி கல்ராணி, ஜனனி ஐயர் உள்ளிட்டோரும் ஓட்டு போட்டனர்.

காலை 11.30 மணி அளவில் நடிகர் விஜய், வாக்களிக்க வந்தார். அவரை பாதுகாப்புடன் போலீசார் வாக்கு மையத்துக்குள் அழைத்துச் சென்றனர். வாக்கு மையத்தில் இருந்த நடிகர் விவேக்குடன் சிறிது நேரம் பேசிய விஜய், தனது வாக்கினைப் பதிவு செய்து விட்டு புறப்பட்டார். அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக சிலரை போலீசார் தள்ளினர். இதனால் சங்க உறுப்பினர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

image

நடிகர்கள் சிவக்குமார், பிரபு, ராஜ்கிரண், பார்த்திபன், விசு, விக்ரம், சூர்யா, விக்ரம் பிரபு, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், சாந்தணு பாக்யராஜ், விஜய் ஆண்டனி, அருண் விஜய், சிவா, உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, தம்பி ராமையா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 

தேர்தல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சங்கத்திற்கு, தமிழ் தாய் நடிகர் சங்கம் என பெயர் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நடிகர் விஜயகுமார் முன் வைத்தார். இவரது கோரிக்கைக்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விவேக், கமல்ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ் தாய் நடிகர் சங்கம் என பெயர் மாற்ற எழுந்துள்ள கோரிக்கை குறித்து கேட்டதற்கு பதில் அளித்த நாசர், இதை சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும் என்று தெரிவித்தார். மோகனின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தி விட்டதாகக் கூறிய அவர், இதேபோல் சென்ற முறையும் அவர் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதாகவும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், அவசர கதியில் தேர்தல் நடப்பதால் பலரால் வரமுடியவில்லை என்றும், மூத்த நாடக கலைஞர்கள் பலர் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே வாக்குமையத்தில் யதார்த்தம் பொன்னுச்சாமி என்பவர் மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.

இதேபோல் நடிகர் சங்க உறுப்பினரான சேலத்தைச் சேர்ந்த சுந்தரம் என்ற முதியவர் வாக்களிக்க வந்த போது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார். அவரை நடிகர் அபி சரவணன் மீட்டு, தனது காரில் அழைத்துச் சென்று, முதியவர் தங்கியுள்ள குன்றத்தூர் காப்பகத்தில் இறக்கி விட்டார்.

தேர்தல் 5 மணிக்கு நிறைவு பெற்றதை ஒட்டி, வாக்குப்பெட்டிகள், சீல் வைக்கப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி லாக்கருக்கு அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.