​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுகாதாரமற்ற பள்ளிக் கழிவறை அதற்கும் கதவில்லை.. துயரத்தைக் கொட்டிய மாணவிகள்

Published : Jun 21, 2019 8:36 AMசுகாதாரமற்ற பள்ளிக் கழிவறை அதற்கும் கதவில்லை.. துயரத்தைக் கொட்டிய மாணவிகள்

Jun 21, 2019 8:36 AM

டலூர் மாவட்டம் சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதியுறுவதாக மாணவி ஒருவர் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளார்.

சுத்தமான...சுகாதாரமான இந்தியா.... என்ற பாரத பிரதமரின் உன்னதமான திட்டத்தை அனைவரும் வரவேற்று செயல்படுத்தும் நிலையில் சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலவும் அவலமோ எடுத்துச்சொல்லி மாளாது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளில் ஒருவர் துணிச்சலுடன் வர்த்தக சங்க வாட்ஸ் அப் குரூப்பில் பள்ளியின் அவல நிலை குறித்து கண்ணீருடன் விவரித்து இருந்தார்.

”காலையிலிருந்து மாலைவரை இயற்கை உபாதைகளை கழிக்கமுடியாமல் அடக்கவேண்டிய சூழலில் இருக்கிறோம் பத்துக்கும் மேற்பட்ட பாத்ரூம்களில் கதவுகளே இல்லை, இருப்பதுக்கும் மேற்பட்ட கதவுகள் உடைந்து தொடங்குகிறது, அருள்கூர்ந்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னார்வ அமைப்பினர் எங்களை காப்பாற்றுவார்களா”.... என பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவி தனது குரலை பதிவு செய்து இருந்தார். மாணவியின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் மற்றும் குரல் வெளியிடப்படவில்லை.

இதனை கேட்ட சிதம்பரம் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ஆ.சிவராம வீரப்பன் அதிர்ச்சி அடைந்ததுடன் நேராக ஆடியோ குரல் ஆதாரத்துடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கும் சிதம்பரம் நகராட்சி ஆணையர் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இதையடுத்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தார். நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பெண்கள் பள்ளிக்கு சென்று முழுவதுமாக ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின் கழிவறைகளின் அவல நிலையை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தண்ணீரும் கதவுகளும் இல்லாத சுகாதாரமற்ற கழிவறைகள், அதில் இருந்து வீசும் துர்நாற்றம் முகம் சுளிக்க வைத்தது. ஆங்காங்கே குப்பைகள் கொட்டிக்கிடக்க, கழிவறை அருகிலேயே வகுப்பறையும், மரத்தடியில் மாணவிகளை கட்டாந்தரையில் அமர வைத்து பாடம் நடத்தப்படுவதும், மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது அவர்களுக்கு பின்புறம் சர்வ சாதாரணமாக பன்றிகள் உலா வருவதையும் பார்த்த சட்டமன்ற உறுப்பினரும் அதிகாரிகளும் ஒரு நிமிடம் திகைப்படைந்து போனார்கள்.

நோய் தொற்று ஏற்படக்கூடிய சுகாதாரமற்ற இது போன்ற சூழலில் மாணவிகளால் எப்படி கல்வி கற்க முடியும் என கடிந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிவறைகளுக்கு கதவு அமைத்து தரவும் , உடைந்து தொங்கும் கழிவறை கதவுகளை மாற்றவும் முன் வந்தார். காம்பவுண்ட் சுவர் வசதியில்லாமல் இருப்பதை பார்த்து 300 சதுர அடி அளவிற்கு காம்பவுண்ட் சுவர் கட்டவும் உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்து வகுப்பறைகளுக்கு சென்ற போது ஒரே அறையில் பழுதடைந்த கட்டிடத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை அடைத்து வைத்து வகுப்பு எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தனர்.

உடனே தலைமை ஆசிரியரை கூப்பிட்டு இவ்வாறு பழுதடைந்த கட்டிடத்தில் மூச்சு விட முடியாத இடத்தில் பாடம் நடத்தினால் எவ்வாறு படிப்பார்கள் என்று கூறியதுடன் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்வதாகவும் இனிமேல் அந்த இடத்தில் மாணவிகளை அமர வைக்க வேண்டாம் என்றும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மேலும் நகராட்சி பணியாளர்கள் ,மின்னல்வேகத்தில பள்ளியில் சுகாதார பணிகளை மேற்கொண்டு தூய்மைப் படுத்தினார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியை பார்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.

இறுதியில் மாணவிகள் செல்போனை வகுப்பறையில் பயன்படுத்தக் கூடாது எனறும் பள்ளியில் இருந்து வெளிவந்த பின்னரே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கினார்.

வாட்ஸ் அப் பில் ஒலித்த பெயர் தெரியாத ஒரு மாணவியின் அபயக் குரலால் பள்ளிக்கு விடிவு காலம் பிறந்ததை அறிந்த ஒட்டுமொத்த மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.