​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொளுத்தும் வெயில்.... மரத்தடி..... மண் தரை.... இதன் பெயர் பள்ளியா?

Published : Jun 20, 2019 8:41 PM

கொளுத்தும் வெயில்.... மரத்தடி..... மண் தரை.... இதன் பெயர் பள்ளியா?

Jun 20, 2019 8:41 PM

விருத்தாச்சலம் அருகே குடிக்க தண்ணீர் இன்றி, படிக்க வகுப்பு அறைகள் இன்றி, போதிய பாதுகாப்பு இன்றி அரசு பள்ளி மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  தினந்தோறும் இன்னல் படும் மாணவர்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கொளுத்தும் அக்னி வெயிலுக்கு இடையே மரத்தடியில், மண் தரையில் படிக்கும் மாணவர்கள், சுற்றுச் சுவர் இல்லாமல் வெட்டவெளியாய் திறந்து கிடக்கும் அரசு பள்ளி ......
இது விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தில். அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11,12-ஆம் வகுப்புகள் செயல்படும் கட்டிடம் சுற்றுச்சுவருடன் கூடிய பாதுகாப்பான வளாகத்தில் உள்ளது. ஆனால் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள வளாகம் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்து கிடக்கிறது.

பள்ளிக்கு முன்னால் செல்லும் சிதம்பரம் - விழுப்புரம் சாலையின் வழியே தினந்தோறும் பல நூறு வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளியின் முன் உள்ள அந்த மைதானத்தில் தான் பல வாகனங்களும் வந்து திரும்புகின்றன. இதனால் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

 

கொளுத்தி எடுக்கும் வெயிலால் தவிக்கும் மாணவர்கள், குடிக்க அந்த பள்ளியில் தண்ணீர் கூட கிடையாது. தாகத்தால் தவிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றே குடிநீரைப் பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்காக சாலையில் செல்லும் போது மாணவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில், 6 வகுப்புகள் மரத்தடியிலும், வராண்டாவிலும் நடைபெறுகின்றன. கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், கொதிக்கும் சூழலில், மண் தரையில் அமர்ந்து படிப்பதால், மாணவ, மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

பள்ளியின் சுற்றுசுவர், சில மாதங்களுக்கு முன்னர் சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்டது என்றும், மீண்டும் கட்டநிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் வந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனிடையே பள்ளியில் மாணவர்கள் படும் அவதி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தடுத்தும் நிறுத்தும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தமிழக பள்ளி கல்வித்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது போன்ற பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கம்மாபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.