​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு

Published : Jun 20, 2019 5:52 PM

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு

Jun 20, 2019 5:52 PM

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2018 ஜனவரி 31ல் ஆலை இயக்குவதற்கான உரிமத்தை புதிப்பிக்கக்கோரி விண்ணப்பித்தால், நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என 2018 ஏப்ரலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2018 மே மாதம் 28-ஆம் தேதி நிரந்தரமாக ஆலையை மூட கொள்கை முடிவெடுத்து, ஆலை மூடப்பட்டது என்றும், இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாசுபடுத்திய காரணத்தினாலேயே ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது என்றும், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தமுள்ள 60 தொழிற்சாலைகளில் 51 இயங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. ஆலையை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளது என்றும், எனவே நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.