​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Published : Jun 19, 2019 4:23 PM



ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Jun 19, 2019 4:23 PM

மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய குழு அமைப்பது என்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் அரசு செலவினமும், கட்சிகளின் நேரமும் மிச்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்று தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்பதும், அரசியல் சட்டத்தை திருத்தி புதிய சட்ட வரைவை கொண்டு வர நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லியில் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தி.மு.க. ஆகிய 5 முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை. இதே நேரத்தில் ஆம் ஆத்மி சார்பில் ராகவ் சந்தாவும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஜெகதேவ் காலாவும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி சார்பில் அந்த கட்சித் தலைவரின் மகன் கே.டி.ராமாராவும் பங்கேற்றனர். பா.ஜ.க கூட்டணி கட்சிகளில் அதிமுக தவிர அனைத்து கட்சியினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதியம் 3 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் மாலை 7 .30 மணி வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றார். இதில் 21 கட்சிகளின் தலைவர்களும், மூன்று கட்சிகளின் பிரதிதிநிதிகளும் பங்கேற்றதாக அவர் கூறினார்.

மக்களவைக்கும், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயக் குழு அமைப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆய்வு நடத்தும் குழுவை பிரதமர் மோடி அமைப்பார் என்ற ராஜ்நாத் சிங், இதன் பின்னர் அந்த குழு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த என்ன வழிமுறைகளை கையாளலாம், சிக்கல்களை தீர்ப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் குழு ஆராயுமென ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பலான கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்த தாக அவர் கூறினார். இடது சாரி கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஆனால் கூட்டத்திற்கு பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்றார். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிதி ஆயோக்கின் திட்டமான 28 மாநிலங்களில் உள்ள 117 மாவட்டங்களில் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்த சிறப்பு திட்டத்தை அமல்படுத்துவது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.