​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனி கடை விரித்த அரசு மருத்துவர்கள்..! அமைச்சர் எச்சரிக்கை

Published : Jun 15, 2019 8:16 PM

தனி கடை விரித்த அரசு மருத்துவர்கள்..! அமைச்சர் எச்சரிக்கை

Jun 15, 2019 8:16 PM

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளை, அங்குள்ள மருத்துவர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தாங்கள் நடத்தும் கிளினிக்குக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகளாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் வந்து செல்கின்றனர். பல்வேறு உயர்தர சிகிச்சை கருவிகள் இருப்பதோடு மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால் பிற தாலுகா மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வரும் நோயாளிகள் கூட மேல்சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில்தான் இங்குள்ள மருத்துவர்களில் சிலர், சிகிசைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அவர்களை நீண்ட நாட்கள் காக்க வைத்திருந்து, தாங்கள் சொந்தமாக நடத்தும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று குற்றம்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதற்கென மருத்துவர்கள் தரப்பு இடைத்தரகர்களை வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு இழுக்க இங்குள்ள மருத்துவர்கள் சில யுக்திகளை கையாள்கிறார்கள். அதாவது கடமைக்காக காலையில் மருத்துவமனைக்கு வருவது, நோயாளிகளை எதிர்கொண்டு அவர்களது பிரச்சனைகளை கேட்பது, பின்னர் அவர்களை எக்ஸ்ரேவோ, ஸ்கேனோ எடுத்துவரச் சொல்லிவிட்டு அறையை பூட்டிக்கொண்டு வெளியேறிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி நோயாளிகள் வெறுத்துப்போய் இடைத்தரகர்கள் சொல் கேட்டு மருத்துவர்களின் சொந்த கிளினிக்குக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நோயாளிகளின் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று அறிய அங்கு பணிபுரியும் ஃபெரோஸ்கான் என்ற மருத்துவர் தனியாக நடத்தும் NH ஆர்த்தோகேர் என்ற மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்து, 12 நாட்களாக காத்திருந்து வெறுத்துப்போய் இந்த மருத்துவமனைக்கு வந்ததாகக் கூறினார். இதுவரை 2 லட்சத்துக்கு மேல் செலவாகி இருப்பதாக அவர் கூறியது நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதுகுறித்து மருத்துவர் ஃப்ரோஸ்கானிடம் கேட்டபோது தன்னுடைய மருத்துவமனைக்கு மட்டுமல்ல, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைகளுக்கும் நோயாளிகள் விருப்பப்பட்டே செல்வதாகக் கூறினார்.

நீண்ட நாட்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தாலும் தொடர்புடைய துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் புகார் குறித்து கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனிடம் புகார்கள் குறித்து கேட்டபோது, அரசு மருத்துவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்

பல கோடி ரூபாய் செலவழித்து, நவீன சிகிச்சை கருவிகளை இறக்குமதி செய்து அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதுபோன்ற சில அரசு மருத்துவர்களால் அரசின் நடவடிக்கைகளுக்கு பலனில்லாமல் போவதோடு அவப்பெயரும் உண்டாவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.