​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதி தீவிர புயலாக மாறியது "வாயு புயல்"

Published : Jun 12, 2019 6:15 AM

அதி தீவிர புயலாக மாறியது "வாயு புயல்"

Jun 12, 2019 6:15 AM

வாயு புயல் நாளை கரையை கடக்க இருப்பதால், குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் முழு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால், 3 லட்சத்திற்கும் மேற்பட்டரை, பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி இன்று பிற்பகலில் தொடங்க உள்ளது. 

அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் குஜராத் மாநிலத்தின் வெரவாள் - டையூ ( Veraval - Diu) இடையே, நாளை அதிகாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், தீவிர புயலாக மாறி, மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் கடற்கரை பகுதியை நோக்கி, சுற்றிச்சுழன்று நகர்ந்து வரும் வாயு புயல், தற்போது, கொங்கன் கடற்பகுதியை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. வாயு புயல் கரையேறும் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் குஜராத் மாநிலத்தின் வெரவாள் என்ற இடத்திலிருந்து, தெற்கே, 340 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாயு புயலின் நகர்வு குறித்து தொடர்ந்து கண்காணித்து வரும் குஜராத் வானிலை மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், அதி தீவிர புயலாக உருவெடுத்திருக்கும் வாயு புயல், வெரவாள் - டையூ இடையே நாளை அதிகாலையில் கரையை கடக்கும்போது, மணிக்கு 150 முதல் 170 கிலோ மீட்டர் வரையில், பலத்த காற்று வீசக்கூடும் எனக் கூறியிருக்கிறது.

வாயு புயல் நாளை கரையை கடக்க இருப்பதால், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கும், அதன் அண்டை மாவட்டங்களுக்கும், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டையூ யூனியன் பிரதேச நிர்வாகமும், பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

புயல் கரையை கடக்கும்போது, பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்க்கும் என்பதால், குஜராத் மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சம் பேர், இன்று பிற்பகல் முதல், 700 பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையைச் சேர்ந்த 39 படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தைச் சேர்ந்த 34 அணியும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், கட்ச், போர்பந்தர், சவுராஷ்டிரா மண்டலம் ஆகியனவற்றில், சீதோஷ்ண நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. கடற்கரையோர மாவட்டங்கள், அதன் அண்டை மாவட்டங்களை, கருமேகங்கள் சூழந்திருக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாயு புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், புயலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணிகள் குறித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

குஜராத் மாநில கடற்கரையோர பகுதி மக்களை வாயு புயலில் இருந்து காத்திட எல்லாம் இறைவனை வேண்டுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். வாயு புயலின்போது, பொதுமக்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், அது கரையேறி கடந்துபோகும், கடற்கரை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு, குஜராத் அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது.

வாயு புயலால், போர்பந்தர், தேவபூமி துவாரகா, ராஜ்கோட், ஜுனாகார், கிர் சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர் ஆகிய குஜராத் மாநிலத்தின் 7 மாவட்டங்களும், டையூ யூனியன் பிரதேசமும், கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, கணிக்கப்பட்டிருக்கிறது. 

வாயு புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் அடுத்த 5 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக, குஜராத் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.


ஃபானி புயலின்போது, ஒடிசா அரசு தனது மக்களை பத்திரமாகவும், துரிதமாகவும் வெளியேற்றியது. இதன் அடிப்படையில், குஜராத் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு, அழைத்துச் செல்வது குறித்து, ஒடிசா அரசிடம், குஜராத் அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

வாயு புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும்போது மணிக்கு 170 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருக்கிற நிலையில், கடலோர மாவட்டங்களில், தற்போது முதலே பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற சோம்நாத் கோவில் வளாகத்தில், பலத்த காற்று வீசியபோது, அடர் காற்று மாசுவுடன், புழுதி புயல் வீசும் காட்சிகள் பதிவு செய்யப்ப்ட்டு வெளியிடப்பட்டுள்ளன. 

 வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு மையத்தில் இருந்து, குஜராத்திற்கு வாயு புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட, 108 வீரர்கள் விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.  அங்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு மையத்தில் இருந்து, சுமார் 108 வீரர்கள் விமானம் மூலம் புறப்பட்டனர்.

துணை கமாண்டர் ராஜன் பாலு தலைமையில் ஆறு குழுக்களாக அவர்கள் சென்றனர். அதிநவீன மீட்பு கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

வாயு புயல் காரணமாக, குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இடைநிற்றலின்றி ஈடுபட்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். வாயு புயலின் நிலைமை குறித்து, மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பிரதமர் கூறியிருக்கிறார்.