​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேச்சிலர்களைக் குறிவைத்து சென்னையில் தொடர் திருட்டு

Published : Jun 11, 2019 12:27 PM



பேச்சிலர்களைக் குறிவைத்து சென்னையில் தொடர் திருட்டு

Jun 11, 2019 12:27 PM

சென்னையில் நண்பர்களுடன் தங்கி இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருமணமாகாத இளைஞர்கள் ஏராளமானோர் சென்னையில் மேன்சன், லாட்ஜ், மற்றும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவ்வாறு தங்கி இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து அண்மைக் காலமாக திருட்டு அரங்கேறி வந்தது.

காற்றோட்டத்திற்காக கதவை திறந்து வைப்பது, மொட்டை மாடிக்குச் சென்று உறங்குவது ஆகியவற்றை சாதகமாக்கிக் கொண்டு, திருட்டு நடைபெற்றது. இதுதொடர்பாக வடபழனி, விருகம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கோயம்பேடு, ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வடபழனியில் இருசக்கர வாகனம் திருடு போனதாக சிசிடிவி காட்சிகளுடன் புகார் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இருசக்கர வாகனத்தை இருவர் திருடுவது பதிவாகி இருந்தது. அந்த நபர்கள் குறித்து விசாரிக்கையில், கடலூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சிங்காரவேலு என்பதும், அவர்கள் ஏற்கெனவே இதுபோல் திருடி போலீசில் சிக்கியவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து கடலூருக்குச் சென்ற வடபழனி போலீசார், அந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இளைஞர்கள் அசந்து உறங்கும் நேரத்தில் செல்போன்களைத் திருடியதாகவும், சாவியை எடுத்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்று கடலூரில் பாதி விலைக்கு விற்றதாகவும் அந்த இருவரும் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.