​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஆலோசனை குழு கூட்டம்

Published : Jun 10, 2019 7:36 PM

விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஆலோசனை குழு கூட்டம்

Jun 10, 2019 7:36 PM

தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டு ஆணைய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஆலோசனை குழு கூட்டம், சென்னை தலைமைசெயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி, கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தாளாளர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்எம்கே பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரெத்தினம், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ஜி.வி.செல்வம் வி.வி.ஆர்.ராஜ்சத்தியன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புக்கான வசதியை ஏற்படுத்துதல், கிராமங்களை தத்தெடுத்து விளையாட்டை ஊக்குவித்தல், விளையாட்டு வீரர்களை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவை அடிப்படையிலான உதவிகளை அளித்தல், விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி நிறுவனங்களில் இலவச சேர்க்கை, மருத்துவ காப்பீடு வழங்குவது போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள உதவி அளித்தல், வேலைவாய்ப்பு வசதி அளித்தல் முதலமைச்சரின் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் திட்டத்தில் பங்களிப்பு, மாநில விளையாட்டு மேம்பாட்டு நிதி ஆகியவை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விளையாட்டை மேம்படுத்த கிரிக்கெட்டுக்கு இருப்பதைப் போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் முதன்மை செயலளார் தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலர் சந்திரசேகர சாரமுரி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.