​​ பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது..!

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது..!

Apr 16, 2018 9:23 PM

பழிக்கு பழியாக கொலை நோக்கோடு பதுங்கியிருந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பாம் சரவணன் குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றவன். ரவுடிகள் பட்டியலில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த நபர் எதிரிகள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலைகுலையச் செய்து பின்னர் கொலை செய்யும் பாணியை கையாண்டதால், பாம் சரவணன் என அழைக்கப்பட்டான். சென்னையில் 1998-ல் திருவிக நகரில் சின்ன குட்டி என்ற ரவுடியை கொலை செய்த பாம் சரவணன் மீது பெரியமேடு, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் கொலை வழக்கு உள்ளது.

2011-ம் ஆண்டில் நீலாங்கரையில் ரவுடி வெள்ளை உமா, 2013-ல் கே.கே.நகரில் கதிரவன் ஆகியோரையும் பட்டபகலில் வெட்டி கொலை செய்தான். பாம் சரவணனின் சகோதரரும், பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருந்த தென் என்கிற தென்னரசு எதிரி கும்பலான சீசிங் ராஜா, வட சென்னை தாதா நாகேந்திரன் கும்பலால் 2015ஆம் ஆண்டில் திருவள்ளூரில் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்குப்பழி வாங்க காத்திருந்த பாம் சரவணன், தென்னரசுவின் கொலையில் தொடர்புடைய சிபிசிஐடியால் தேடப்பட்டு வந்த ஜெயசீலனை கொலை செய்து விட்டு கடந்த 2016ஆம் ஆண்டில் தலைமறைவானான். 

6 கொலை வழக்கு உட்பட 28 வழக்குகள் தொடர்புடைய பாம் சரவணன், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே வேளையில் தலைமறைவாக இருந்து கொண்டு, தன் அண்ணன் தென்னு என்கிற தென்னரசு கொலைக்கு பழி வாங்க, வேலூர் சிறையில் உள்ள தாதா நாகேந்திரனையும், ரவுடி சீஸிங் ராஜாவையும் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் ஆதர்ஷ் தலைமையில் பாம் சரவணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை தேடிய தனிப்படை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பதுங்கி இருந்த போது துப்பாக்கி முனையில் கைது செய்தது.