​​ புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நாராயணசாமி திடீர் ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நாராயணசாமி திடீர் ஆய்வு


புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நாராயணசாமி திடீர் ஆய்வு

Apr 16, 2018 10:38 AM

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்றும், இதனால், மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.

மேலும், அரசு அலுவலகங்களில் தேவைக்கும் அதிகமாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், இதனால், மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி, அப்போதே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று காலை சுமார் 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, 4 மாடிகளிலும் உள்ள நிதி, நலவாழ்வு உள்பட பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலை 9 மணிக்கு பணி நேரம் தொடங்கும் நிலையில், 9.30 மணி வரை சுமார் 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே வந்திருந்ததைப் பார்த்த அவர், கடும் கோபமடைந்தார். மற்ற ஊழியர்கள் ஏன் இன்னும் வரவில்லை எனக் கேட்ட முதலமைச்சர் நாராயணசாமி, சரியான நேரத்துக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.