​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

Published : Jun 03, 2019 10:38 AM

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

Jun 03, 2019 10:38 AM

கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒன்று முதல் 8 ஆம் வரை வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகள் மூலமாக மாணவ மாணவிகள் பயணிக்கலாம் என போக்குவரத்துறை தெரிவித்திருக்கிறது. புதிதாக இலவச பேருந்து அட்டை வழங்கும் வரை இந்த பழைய அட்டையை பயன்படுத்திகொள்ளலாம் என்றும், இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துறை கூறியிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள், சீருடை அணிந்து பயணித்தாலே, டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.

ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. பயோ மெட்ரிக் முறையின் கீழ் ஆசிரியர்கள் விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாகிறது.

இதனிடையே, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றுகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவும் செய்கின்றனர். இந்த பதிவு இன்று தொடங்கி 17ம் தேதிவரை நடக்கிறது