​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Published : Jun 01, 2019 3:29 PM

கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Jun 01, 2019 3:29 PM

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கியது.

கடந்த மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் கோட்சே’ எனப் பேசினார்.

இது இந்து மதத்தினரை புண்படுத்துவதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுப்பதாகவும் கூறி இந்து முன்னணி சார்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து முன் ஜாமீன் கோரி கமல் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார்.

அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றக் கிளை, 20 நாட்களுக்குள் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற உத்தரவிட்டது.

அதன்படி இன்று ஆஜரான கமல்ஹாசனுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஜய் கார்த்தி உத்தரவிட்டார். கமலின் வருகையை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.