​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலாப் பயணிகள் வருகையால் களைகட்டிய சுற்றுலாத் தலங்கள்

Published : May 27, 2019 7:06 AM

சுற்றுலாப் பயணிகள் வருகையால் களைகட்டிய சுற்றுலாத் தலங்கள்

May 27, 2019 7:06 AM

தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் நீடித்து வருவதாலும், கோடை விடுமுறையைக் கழிக்கவும் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.  

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியது முதலே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. மே மாதத்தின் கடைசி வாரவிடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களைப் பார்வையிட ஏராளமானோர் குவிந்தனர். உதகை தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தால் படகு சவாரி  களைகட்டியது.

வெளியூர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்த மக்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விதவிதமான பழவகைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் திரண்ட பயணிகள், இயற்கையின் அழகைக் கண்டு மெய் மறந்து போயினர். நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் முனை ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகைக் கண்டு களித்தனர். நட்சத்திர ஏரி படகுசவாரி, மிதிவண்டி பயணம், குதிரை சவாரி ஆகியவை பயணிகளின் உற்சாகத்தைக் கூட்டின.

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலாப் பயணிகள், சேர்வராயன் குகை கோவில், பகோடா பாயின்ட், அன்னா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

படகு இல்லத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பாதுகாப்பிற்கான லைப் ஜாக்கெட்டுகளை அணியாமலேயே பலர் படகுசவாரி செய்தனர்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழை காரணமாக அருவியில் மிதமாக  வரும் தண்ணீரில் அதிக நேரம் குளிக்க ஆர்வம் காட்டினர். நீச்சல் குளம், சிறியவர் பூங்கா ஆகியவற்றைப் பார்வையிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.  தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால் வியாபாரம் களைகட்டியிருந்தது.


ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால் அதில் குளித்து மகிழ்ந்தனர். பரிசல்களில் சென்றும், ஓய்வெடுத்தும் பொழுதைக் கழித்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்த மக்கள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொங்குபாலம், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களையும் பார்த்து ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் வியாபாரிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.