​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானையை விரட்ட கும்கி யானை வரவழைப்பு

Published : May 27, 2019 6:41 AM

பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானையை விரட்ட கும்கி யானை வரவழைப்பு

May 27, 2019 6:41 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சிறுமி உட்பட இருவரை தாக்கிக் கொன்ற காட்டுயானையை வனத்துக்குள் விரட்டுவதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. 

நவமலை பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருவதாகக் கூறும் இம்மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது காட்டு யானை ஒன்று.

குடிசைகளுக்குள் புகுந்து அரிசி உட்பட சமையல் பொருட்களை சூறையாடிச் சென்ற காட்டுயானையை அடர் வனத்துக்குள் விரட்டக் கோரி வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி 7 வயது சிறுமி ஒருவரையும் மறுநாள் முதியவர் ஒருவரையும் அடுத்தடுத்து தாக்கிக் கொன்றது காட்டுயானை. சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வந்த வனத்துறை அதிகாரிகளின் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கும்கி யானையைக் கொண்டு காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அவர்களை விடுவித்தனர். இதன் தொடர்ச்சியாக இரவு பரணி என்கிற கும்கி யானை நவமலை பகுதிக்கு அழைத்து வரப்பட்டது.

இதனிடையே பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள சண்முகசுந்தரம், நவமலை பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக அவர் உறுதியளித்தார்.