​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது

Published : May 26, 2019 9:13 AM

தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது

May 26, 2019 9:13 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, வேலைக்குப் போகச் சொல்லி அறிவுறுத்திய தாயை கட்டையால் அடித்துக் கொன்ற பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டான். 

பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலாம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள். கணவரை இழந்த அவர், தனது ஒரே மகனான மெளன குருசாமி மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

பி.எஸ்.சி. பட்டம் பெற்ற மெளன குருசாமி வேலைக்குச் செல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தாயார் செல்லம்மாள், கூலி வேலைக்குச் சென்று மகனையும், மகளையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், படித்து விட்டு வீட்டிலேயே இருப்பதற்குப் பதில் ஏதாவது வேலைக்குச் செல்லலாமே? என்று மகனுக்கு செல்லம்மாள் அறிவுரை சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மெளனகுருசாமி, பெற்று கஷ்டப்பட்டு வளர்த்த தாய் என்றும் பாராமல் செல்லம்மாளை சுவற்றில் தள்ளியுள்ளான்.

சுவரில் மோதி, செல்லம்மாளுக்கு தலையில் அடிபடவே, பின்னர் கட்டையை எடுத்து தலையிலேயே மகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் உயிரிழந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

தாயைக் கொலை செய்து விட்டு மெளனகுருசாமி வீட்டை விட்டு தப்பி ஓடினான். செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் செல்லம்மாளின் உடலை மீட்டதுடன், தலைமறைவாக இருந்த மெளனகுருசாமியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.