​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உருளைக்கிழங்கு ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காததால் வியாபாரிகள் கவலை

Published : May 20, 2019 4:40 PM

உருளைக்கிழங்கு ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காததால் வியாபாரிகள் கவலை

May 20, 2019 4:40 PM

ஆண்டுதோறும் இலங்கைக்கு அதிக அளவில் நீலகிரி உருளைக்கிழங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆர்டர்கள் ஏதுமின்றி வியாபாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள மொத்த சந்தைக்கு நீலகிரி மட்டுமின்றி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் கொண்டு வரப்படுகின்றன. உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

முதல் தர உருளைக்கிழங்குகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இரண்டு மற்றும் மூன்றாம் தர உருளைக்கிழங்குகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் நீலகிரி உருளைக்கிழங்குகளுக்கு இலங்கையில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதையொட்டி சீசன்தோறும் 700 முதல் 800 டன் வரையிலான நீலகிரி உருளைக்கிழங்குகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.  தற்போது அந்நாட்டிற்கான ஏற்றுமதி ஆர்டர்கள் ஏதும் கிடைக்காததால் உருளைக்கிழங்கு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இதற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உருளைக்கிழங்கு மகசூல் அதிகரித்து, குறைந்த விலையில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, ஏற்றுமதி வரியாக கிலோவிற்கு 50 ரூபாய் வரை விதிக்கப்படுவது என பல்வேறு காரணிகளை அடுக்குகின்றனர் வியாபாரிகள்.

45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ஒன்று 1,800 முதல் 2,000 ரூபாய் வரை விலைபோன நிலையில், 900 முதல் 1,300 ரூபாய் வரை மட்டுமே தற்போது விலைபோவது, வியாபாரிகளை மட்டுமின்றி உருளைக்கிழங்கு சாகுபடியில் ஈடுபடும் வேளாண் மக்களையும் ஒருசேர ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.