​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தீவிரம்

Published : May 19, 2019 10:21 AM

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தீவிரம்

May 19, 2019 10:21 AM

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை.

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர்களை, வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கே அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடலூர் பன்ருட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில், மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடிகளில், 4 மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள், தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே மறுவாக்குப்பதிவு நடக்கும் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடியை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.

மறு வாக்குப்பதிவு நடைபெறும் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 30 ஆண்டு காலம் பாமக கோட்டையாக திகழும் தருமபுரியில், காழ்ப்புணர்ச்சி காரணமாக அளித்த புகாரினாலேயே தற்போது மறுவாக்குப்பதிவு நடப்பதாக குற்றம்சாட்டினார். 

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் காந்திநகரில்  செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்களிடம் டோக்கன் போல் கொடுத்து, 2 ஆயிரம் ரூபாய் தருவதாக திமுகவினர் நிர்பந்திப்பதாக விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.