​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துக்காக குடும்பத்தையே கொன்ற மகன் கைது...

Published : May 18, 2019 9:48 PM

சொத்துக்காக குடும்பத்தையே கொன்ற மகன் கைது...

May 18, 2019 9:48 PM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய், தந்தை, மகன் மூவரும் தீயில் கருகி உயிரிழந்த வழக்கில், திடீர் திருப்பமாக மூத்த மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் குடும்பத்தினரை தீர்த்துக் கட்டி விட்டு ஏசி மின்கசிவு என அழுது புலம்பி மூத்த மகன் ஆடிய நாடகம், கைது செய்யப்பட்டதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

திண்டிவனம் சுப்புராயப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் இரும்புப் பட்டறை மற்றும் இருசக்கர மோட்டார் உதிரி பாகக் கடை உரிமையாளர் ராஜி. இவரது மனைவி கலைச்செல்வி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதியின் மூத்த மகனான கோவர்த்தனன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் தீபா காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதிமுக பிரமுகரான கோவர்த்தனனுக்கு கெளதமன் என்ற இளைய சகோதரர் இருந்தார். அவருக்கு இன்னும் 18 நாட்களில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தங்களது கடைசி பிள்ளைக்கு அறுபது லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கிய ராஜி - கலைச்செல்வி தம்பதி, அந்த வீட்டை வெள்ளிக்கிழமை அன்று பத்திரப்பதிவு செய்து விட்டு அன்றைய தினமே திருமணத்திற்கான ஆடைகள் வாங்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

பல கனவுகளுடன் செவ்வாய் கிழமை இரவு கண்ணுறங்கிய கெளதமன், அவரது தாய் மற்றும் தந்தையுடன் மறுநாள் உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். ஏசி மின்கசிவு காரணமாக பற்றிய தீயே 3 பேரின் உயிரையும் குடித்து விட்டதாக கூறப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற திண்டிவனம் போலீசார் மூன்று பேரது சடலங்களையும் மீட்டனர்.

அப்போது ராஜியின் உடலில் இருந்து ரத்தம் வழிந்திருப்பதைக் கண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீயில் கருகி உயிரிழந்த நிலையில் ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அறையில் சிதறிக் கிடந்த பீர் பாட்டில் துண்டுகள், பெட்ரோல் வாசனை போன்றவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. மேலும் ஏசி நிபுணர்கள் ஆய்வு நடத்திய போது அறையில் இருந்த ஏசி மட்டுமே எரிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியே இருக்கும் எந்திரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இது விபத்தல்ல என்று ஏசி நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

இதை அடுத்து போலீசின் பார்வை ராஜின் மூத்த மகன் கோவர்த்தனன் மீது பட்டது. கோவர்த்தனனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தனது பெற்றோர் மீது விரக்தி இருந்ததாகவும், செவ்வாய் கிழமை இரவு கூட பெற்றோருடன் சண்டை போட்டதாகவும் கிடைத்த தகவல் போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இதை அடுத்து கோவர்த்தனனனிடம், அவரது மனைவி தீபா காயத்ரியிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மூன்று நாட்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, தனது தாய், தந்தை மற்றும் சகோதரனை எரித்துக் கொலை செய்ததை கோவர்த்தனன் ஒப்புக் கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

ராஜியும், கலைச்செல்வியும் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரர்கள். தனக்குத் திருமணமான நாள் முதல் அவர்களிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்குமாறும், பணம் கொடுக்குமாறும் கோவர்த்தனன் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனல் பல்வேறு தொழில்களில் கோவர்த்தனன் ஈடுபட்டபோதும், எதுவும் அவருக்கு கை கொடுக்காததால், ஒரு கட்டத்தில் மூத்த மகனை ஒதுக்கி வைத்து விட்டு, கெளதமனையே பெற்றோர் அதிகம் நம்பியதாகவும் சொல்லப்படுகிறது.

சொத்து நிர்வாகம் தொடங்கி பணம் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் கெளதமனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கோவர்த்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தனக்கு மட்டும் எளிய முறையில் திருமணம் செய்து வைத்து விட்டு, தனது சகோதரன் கெளதமனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்க தாய், தந்தை முடிவு செய்து இருந்ததை கோவர்த்தனன் விரும்பவில்லை.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோவர்த்தனனுக்கு சொத்துகளின் மீதிருந்த ஆசையும், பெற்றோர் மீதான கோபமும் கண்ணை மறைத்து விட்டது. தனது குடும்பத்தை தீர்த்துக் கட்ட 6 மாதமாக திட்டம் போட்ட கோவர்த்தனன், மூன்று பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி விட்டு திரி பொருத்தி, செவ்வாய் கிழமை இரவு தயாராக இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அதிகாலையில் கெளதமன் தனது தாய், தந்தையுடன் உறங்கிக் கொண்டிருக்க அந்த அறையில் பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசி விட்டு கதவை வெளிப்பக்கமாக தாழிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது மனைவி தீபா காயத்ரி தடுக்கவே, அவரையும் கொலை செய்து விடுவதாக கோவர்த்தனன் மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்து கெளதமனும், கலைச்செல்வியும் இறந்து விட, ராஜி மட்டும் சமையலறை வழியாக எரிந்தபடி வெளியே ஓடி வந்ததாகவும், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று கத்தியால் கோவர்த்தனன் கழுத்து மற்றும் தோள்பட்டையில் குத்தியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழிந்த ரத்தம் தான் கோவர்த்தனனை காட்டிக் கொடுத்த முதல் தடயம். திட்டம் கனகச்சிதமாக நிறைவேறி விட்டதாக எண்ணிய கோவர்த்தனன், ஏசி மின் கசிவு என நாடகமாடியுள்ளார்.

சொத்துக்காக ரத்த சொந்தத்தை தீக்கிரையாக்கிய கோவர்த்தனனும், அவரது மனைவி தீபா காயத்ரியும் தற்போதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையை கூலிப்படையை வைத்தே கோவர்த்தனன் அரங்கேற்றி இருக்கக் கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது அது போன்று எதுவும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். சொத்தின் மீதான ஆசை, கண்ணை மறைத்தது தான் கொலைக்குக் காரணமாகி உள்ளதாக சுட்டிக் காட்டுகின்றனர் காவல்துறையினர்..