​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் ஆணையத்தில் பிளவா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

Published : May 18, 2019 2:35 PM

தேர்தல் ஆணையத்தில் பிளவா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

May 18, 2019 2:35 PM

தேர்தல் ஆணையர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் சர்ச்சை உருவாகி உள்ளது. ஆனால்  கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.

மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார். மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது. 

இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ள அசோக் லவாசா, பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தமது கருத்தை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர் என்ற அவர், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் தமது கருத்து ஏற்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என்று கூறியுள்ளார். முக்கிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் ஒரே மாதிரியான முடிவை எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அவர், கடந்த காலங்களிலும் இது போன்ற முரண்பாடான கருத்துக்கள் ஏற்பட்டு உள்ளன என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒரு விவகாரம் குறித்து ஒவ்வொருவர் பார்வையில் வேறுவிதமான கருத்துக்கள் கடந்த காலங்களில் உருவாகி உள்ளன என்ற அவர், 3 பேர் கொண்ட குழுவில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது இயலாத ஒன்று என்று கூறியுள்ளார். எந்த புகார் குறித்த பொது விவாதத்திற்கும் எப்போதும் தயார் என்றும் தற்போது தேர்தல் காலம் என்பதால் விவாதத்திற்கு நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.