​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை - சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு

Published : May 17, 2019 9:42 PM

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை - சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு

May 17, 2019 9:42 PM

ட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்தது.

நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுக்க அரசிடமிருந்து தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து குடிநீர் விற்பனை நிறுவனத்தினர் 75 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி அளித்த தீர்ப்பில், நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவை அளவீடு செய்வதற்காக ‘ப்ளோ-மீட்டர்’ பொருத்தாத நிறுவனங்களுக்கு தடையில்லாச் சான்று அரசு வழங்கக்கூடாது என்றார்.

வணிக ரீதியில் தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரை சட்டவிரோதமாக திருடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் திருட்டு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புளோ மீட்டர் பொருத்தப்பட்ட பிறகும், வரையறுக்கப்பட்ட அளவைத்தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள், சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி விட்டு அதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டி.வி சேனல்கள், பத்திரிகைகளில், ‘தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவமதிப்படுவதாகவும், மறுபுறம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் செய்திகள் வெளியாகின.

இதை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.

இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலத்தடி நீர் கொள்ளை அடிக்கப்படுவதையும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு, பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதையும் அதிகாரிகள் தடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்வதாகவும், அவர்கள் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்

1. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

2. தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

3. ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

4.விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

5. முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

6. கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டனை வழங்கக்கூடாது? ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வருகிற 20 ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.