​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட கொலை

Published : May 17, 2019 1:02 PM



ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட கொலை

May 17, 2019 1:02 PM

திண்டிவனத்தில் ஏசி மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தாய், தந்தை, மகன் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம், திட்டமிடப்பட்ட கொலை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜி-கலைச்செல்வி தம்பதியின் இளைய மகன் கெளதமுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 3 பேரும் அறையில் தீப்பிடித்து உடல் கருகி உயிரிழந்தனர்.

ஏசி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ராஜி-யின் சடலம் மட்டும் அறைக்கு வெளியே கிடந்துள்ளது.

மேலும்  அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது, கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தது, அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் ஆகிய தடயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஏசி மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுவது பற்றியும் தடயங்கள் அடிப்படையில் போலீசாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சொத்து தொடர்பாக குடும்பத்தில் கடந்த ஒரு வாரமாக சண்டை சச்சரவுகள் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜி, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தினர். இதில் 3 பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ராஜி-கலைச்செல்வி தம்பதியின் மூத்த மகன் கோவர்த்தனிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற நாளில், 3 பேரும் உயிரிழந்த அறைக்கு அருகில், கோவர்த்தன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார் என்பதால்,  இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், மூத்த மகன் கோவர்தனே தனது தாய்-தந்தையையும் தம்பியையும் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. கூலிப்படையை வரவழைத்து, கொலை செய்த பிறகு தப்பிச் செல்ல செய்திருக்கலாம் என்பதால், வீட்டின் பின்புறம் உள்ள தனியார் லாட்ஜில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவர்த்தன் மற்றும் அவரது மனைவி தீபாகாயத்ரியிடம் செல்பேசியில் பேசியவர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே தாய், தந்தை மற்றும் சகோதரரைக் கொலை செய்ததை கோவர்த்தனன் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறி இருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாரையும் காப்பாற்றுவதற்கு கோவர்த்தனன் முயற்சி செய்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கோவர்த்தனிடமும், அவரது மனைவி தீபா காயத்ரியிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவர்த்தனனிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களை அழைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.