​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நான் அவன் இல்லை" மோசடி நபர் கைது

Published : May 16, 2019 7:02 PM



"நான் அவன் இல்லை" மோசடி நபர் கைது

May 16, 2019 7:02 PM

கணவனை இழந்த பெண் மருத்துவர்களைக் குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்தவனை திருச்சியில் போலீசார் கைது செய்தனர். நான் அவன் இல்லை திரைப்பட பாணியில் நடந்த மோசடி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

திருச்சியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். மறுமணத்திற்காக திருமண தகவல் மைய இணையதளங்களிலும் விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஒரு இணையதளத்தில் விது என்ற நபரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் மருத்துவருக்கு வாழ்வு கொடுக்கத் தயார் என்று விது கூறி இருக்கவே, அவரை அந்தப் பெண் மருத்துவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. விதுவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கவே, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணுடன் விது நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்க, திருவண்ணாமலையில் உள்ள விதுவின் வீட்டிற்கு அந்தப் பெண் மருத்துவர் சென்ற போது அவனது குட்டு அம்பலமானது,.

அந்த வீட்டில் இருந்த ஒரு கொரியரை பிரித்து பார்க்கவே, அதில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அது யார் என்று கேட்கையில், சகோதரி என்று கூறி அவன் சமாளித்துள்ளான். இருப்பினும் அனுப்புநர் விவரத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு பெண் மருத்துவர் அழைப்பு விடுத்து விசாரித்தார்.

அப்போது எதிர்முனையில் பேசிய பெண் தன்னை மருத்துவர் என்று கூறியதுடன், அமெரிக்க மருத்துவரை மணந்து கொள்ளப் போவதாகவும் கூறவே, திருச்சி பெண் மருத்துவருக்கு தூக்கி வாரிப் போட்டது. பல்வேறு திருமண தகவல் மைய இணையதளங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்து பெண்களிடம் அவன் பழகி வந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தெரியாமல், 18 லட்சம் ரூபாய் வரை அவனிடம் கொடுத்து ஏமாந்ததை எண்ணி, லால்குடி மகளிர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். விசாரணையில் அவன் திருவண்ணாமலை மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பதும், கட்டிட பொறியாளராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவனைக் கைது செய்வதில் தாமதம் ஏற்படவே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சக்கரவர்த்தியைக் கைது செய்யாவிட்டால், திருச்சி எஸ்.பி. நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் கண்டிக்கவே, உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். அஜய், விஜய், விஜயகுமார், விது, சரவணன் ஆகிய பல பெயர்களில் அவனுக்கு திருமணத் தகவல் இணையதளங்களில் கணக்கு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சக்கரவர்த்தி மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனது கார் ஓட்டுநர் முருகன் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.

எந்தப் பெண்ணையும் தாமாக தேடிச் சென்று ஏமாற்றவில்லை என்றும், அவர்களாகவே தொடர்பு கொண்டு ஏமாந்து விட்டதாகவும் சக்கரவர்த்தி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ஆறரை கோடி ரூபாய் வரை சக்கரவர்த்தியிடம் கொடுத்து ஏமாந்திருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது அனைத்திற்கும் காரணம், திருமணத் தகவல் மைய இணையதளங்கள் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு கண்காணிக்காமல் விடுவது தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இணையதளங்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது

வீட்டிற்குச் சென்று வரன் பார்க்கும் காலம் போய், இணையதளம் மூலம் இரு பாலர்களும் எதிர்காலத்தை தேர்வு செய்யும் இந்த கால கட்டத்தில், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது இச்சம்பவம்.