​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏசி மின்கசிவா? கொலையா? வழக்கில் திகில் திருப்பம்...

Published : May 16, 2019 6:07 PM

ஏசி மின்கசிவா? கொலையா? வழக்கில் திகில் திருப்பம்...

May 16, 2019 6:07 PM

திண்டிவனத்தில் அறையில் தீப்பிடித்து தாய், தந்தை, மகன் உடல் கருகி உயிரிழந்ததற்கு ஏசி மின்கசிவு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காலி மண்ணெண்ணெய் கேன், கருகிய உடலில் இருந்து வழிந்த ரத்தம் போன்ற தடயங்களால், வழக்கில் திருப்பம் ஏற்பட்டது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தி...

புகை மண்டலம் சூழ்ந்த அறை.. கருகிய நிலையில் கிடந்த 3 சடலங்கள்.. திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜ்-க்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகனுக்கும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்தது என்ன? 

காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், இரும்புப் பட்டறை உரிமையாளர். அவரது மனைவி கலைச்செல்வி, வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களது மூத்த மகன் கோவர்த்தனனுக்கு 7 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது. அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினராக இருக்கும் கோவர்த்தனனுக்கு ஒரே சகோதரர் கெளதம். அவருக்கு இன்னும் 20 நாளில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், செவ்வாய் கிழமை இரவு வழக்கம் போல் தனது தாய், தந்தையுடன் ஒரு அறையில் கெளதம் உறங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் கோவர்த்தனன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணி அளவில் கெளதம் உறங்கிக் கொண்டிருந்த அறையில் தீப்பிடித்து அறை முழுவதையும் தீ சூழ்ந்தது. 3 பேரும் அலறித் துடித்த சில நிமிடங்களில் உடல் கருகி சடலமாகினர்.
ராஜின் சடலம் மட்டும் அறைக்கு வெளியே கிடந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற திண்டிவனம் போலீசார், மூன்று பேரது சடலங்களையும் மீட்டனர். சம்பவ இடத்தை விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பின்னர், கோவர்த்தனனிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. எரிந்த நிலையில் அறையை விட்டு ராஜ் ஓடி வந்திருப்பதாக கூறப்படுவதால், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு ஏசி மின்கசிவு என வழக்கை திசை திருப்ப திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த ராஜ்-க்கு, அதிக சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்து தொடர்பாக குடும்பத்தில் கடந்த ஒரு வாரமாக சண்டை சச்சரவுகள் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் பகீர் புகார் எழுந்துள்ளது.

கோவர்த்தனனிடம் புதன் கிழமை அன்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வியாழன் அன்றும் காவல் நிலையத்தில் வைத்து கோவர்த்தனனிடம் விசாரணை தொடர்ந்தது. ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு இருப்பது உண்மையா? என்பது குறித்து ஏசி பழுது நீக்கும் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் வழக்கில் ஒரு முடிவு கிடைத்து விடும் என்பதால் அதற்காகவும் காத்திருக்கின்றனர் காவல்துறையினர்.