​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா..!

Published : May 16, 2019 5:37 PM

இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா..!

May 16, 2019 5:37 PM

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓயும் நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. அன்று 91 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தலும், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தலும், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது.

கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தலும், கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்டத் தேர்தலும் நடைபெற்றது.

6 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், 7-வது கட்ட தேர்தல், பீகார், ஜார்க்கண்ட் , மத்திய பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்காளம் , சத்தீஸ்கர் , உத்தரபிரதேசம் , இமாச்சலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளில் 19-ஆம் தேதி அன்று நடக்கிறது.

இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் வியாழன் இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

இதனால் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19-ந் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.