​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 விண்கலம்

Published : May 16, 2019 10:23 AM



நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 விண்கலம்

May 16, 2019 10:23 AM

நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 விண்கலத்தில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆய்வுக் கருவி ஒன்றும் இடம்பெற உள்ளதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. 

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர் விக்ரம், நிலவின் பரப்பில் ஆய்வு செய்யும் ஆய்வூர்தி பிரக்யானுடன் (Pragyan) சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலையில் செலுத்தப்பட உள்ளது. 3.8 டன் எடை கொண்ட சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 9ஆம் தேதிக்கும் ஜூலை 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏவப்பட்டு, செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்.

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சந்திராயன்-2 சென்றவுடன், ஆர்ப்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரமானது பிரிந்து நிலவின் தென்துருவத்திற்கு அருகே தரையிறங்கும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் லேண்டர் என்ற பெருமையையும் விக்ரம் பெறும். லேண்டர் விக்ரம் செப்டம்பர் 6ஆம் தேதி தரையிறங்கிய பிறகு, அதிலிருந்து ஆய்வூர்தி வெளியேறி நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இந்த ஆய்வூர்தி, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுத் தகவல்களை நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலமாக பூமிக்கு 15 நிமிடங்களில் அனுப்பும். சந்திராயன்-2 திட்டத்தில், நிலவின் பரப்பை படம் எடுக்கவும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் 13 ஆய்வுக் கருவிகள் இடம்பெற உள்ளன. இதுதவிர நாசாவின் கருவி ஒன்றும் இடம்பெற உள்ளதை இஸ்ரோ தலைவர் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

லேண்டரில் இணைக்கப்படும் நாசாவின் கருவி, பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் தொடர்பான அளவீடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிலவின் பரப்பில் லேண்டர் விக்ரம் எங்கு தரையிறங்கியது என்பதை துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கும் நாசாவின் கருவி உதவும் என சிவன் தெரிவித்துள்ளார்.