​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர் போல் நடித்து நூதன முறையில் நகை கொள்ளை

Published : May 16, 2019 8:13 AM



மருத்துவர் போல் நடித்து நூதன முறையில் நகை கொள்ளை

May 16, 2019 8:13 AM

ஈரோட்டில் நகைக்கடைக்கு போன் செய்து மருத்துவர் போல் பேசிய நபர், 9 சவரன் நகையை வரவழைத்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடைக்கு போன் செய்து பிரபல மருத்துவர் போல பேசிய நபர், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மருத்துவமனைக்கு வரவழைத்து மாயமானார். அதேபோன்ற சம்பவம் தற்போது ஈரோட்டிலும் நிகழ்ந்துள்ளது.

பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து மருத்துவர் பேசுவதாகக் கூறி, பொன்வீதியில் உள்ள பி.பி.கே. என்ற நகைக்கடைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மருத்துவமனை நிர்வாகியின் தாயாருக்கு தாங்கள் பரிசளிப்பதற்காக ஒரு நகையை எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய நகைக்கடை ஊழியர் 9 சவரன் எடையுள்ள 3 தங்கச் சங்கிலிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

வரவேற்பறையில் இருந்த தொப்பி அணிந்த நபர், போன் செய்தது தாம்தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, மற்ற மருத்துவர்களிடம் செயினை காட்டி விட்டு வருவதாகக் கூறி நகையை வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக அந்த நபர் திரும்பி வராத நிலையில், காத்திருந்த நகைக்கடை ஊழியருக்கு தாம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நகையை வரவழைத்து ஏமாற்றியவர் தொப்பி அணிந்திருந்ததாலும், தற்போதும் குற்றம் சாட்டப்படுபவர் தொப்பி அணிந்திருந்ததாலும் இருவரும் ஒரே நபரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.