​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்திற்கு இடைக்கால தடை

Published : May 15, 2019 4:27 PM

ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்திற்கு இடைக்கால தடை

May 15, 2019 4:27 PM

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில், ஐஓசி அதிகாரிகள் கடந்த மே ஆறாம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரித்தபோது,  ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெறாமல், ஐஓசி விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.