​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் - லோடு ஆட்டோ டிரைவர் இடையே மோதல்

Published : May 15, 2019 4:02 PM

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் - லோடு ஆட்டோ டிரைவர் இடையே மோதல்

May 15, 2019 4:02 PM

ராமநாதபுரத்தில் போக்குவரத்து ஆய்வாளருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சரக்கு வாகன ஓட்டுநர், ஆய்வாளரின் கழுத்தில் கடித்து வைத்ததால் ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் கேணிக்கரை 3 முக்கு சாலைப் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேணி கரையிலிருந்து அரண்மனையை நோக்கி அதிகமான பாரத்துடன் விறகு கட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உச்சிப்புளியை அடுத்த துத்தி வலசையை சேர்ந்த கர்ணன் என்ற மாரியப்பன் என்பவர் வந்துள்ளார்.

போக்குவரத்து ஆய்வாளர் வாகனத்தை நிறுத்துமாறு கூறி உள்ளார். ஆனால் கர்ணன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை அடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் முந்தி சென்று வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து ஆய்வாளர், ஓட்டுநர் கர்ணனின் சட்டையை பிடித்து சாலையின் மறுபக்கம் இழுக்கவே ஆத்திரமடைந்த அவர் ஆய்வாளரை தள்ளி விட்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரக்கு வாகன ஓட்டுநர் கர்ணன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்தை கீழே தள்ளி சரமாரியாக தாக்கிய தோடு அவருடைய கழுத்தில் பலமாகக் கடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் சக காவலர்கள் இவர்களது சண்டையை விலக்கி விட முயற்சித்தும் பலனளிக்காமல் போனது.

ஓட்டுநர் கர்ணன் கடித்ததில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்தின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பஜார் காவல் நிலைய போலீசார், ஆய்வாளரை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு கழுத்தில் 5 தையல்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் சரக்கு வாகன ஓட்டுநரர் கர்ணன் என்கிற மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.