​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூ அட்மிஷன்..! பெற்றோர் கவனம்

Published : May 15, 2019 12:09 PM

நியூ அட்மிஷன்..! பெற்றோர் கவனம்

May 15, 2019 12:09 PM

பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடை பெற்று வருகின்றது. போலி சிபிஎஸ்இ பள்ளிகள் பெருகி வரும் நிலையில் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்று முதல் பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டனம் வசூலிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்க குறிக்கோளை லட்சியமாக்க கொண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டன. 

சில பள்ளிகள் சிபிஎஸ்.இ போர்டில் முறையான அங்கீகாரம் பெற்று இயங்கும் நிலையில் கட்டண பேராசை பிடித்த சில தனியார் பள்ளிகள் தங்களை தாங்களே சிபிஎஸ்சி பள்ளிகளாக கூறிக்கொண்டனவே தவிர எந்த ஒரு அங்கீகாரமும் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு வந்து விடும்.... அடுத்த ஆண்டு கிடைத்து விடும்.... பயமில்லாமல் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேருங்கள் என்று கூறி விளம்பரம் செய்யும் இந்த போலி சிபிஎஸ்.இ பள்ளிகளிடம் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம..!

லட்சங்களில் நன்கொடை... கணக்கு வழக்கில்லா கட்டண உயர்வு... எதற்கும் ரசீது கொடுப்பது இல்லை..! கேள்வி கேட்போருக்கு முறையான பதிலும் சொல்வது இல்லை, தங்கள் பள்ளி கட்டண விவரத்தை இணையத்திலும் வெளியிடுவதில்லை..! ஆனால் கேட்கும் பணத்தை நீட்டினால் போதும் பெற்றோரிடம் கேள்வியே கேட்பது இல்லை..! இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது பெரும்பாலான தனியார் பள்ளிகளின் அட்மிஷன்..!

95 சதவீத சிபிஎஸ்.இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 25 சதவீத கல்வி கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. என்பது பெரும்பாலான பெற்றோர்களின் குற்றச்சாட்டாக உள்ளது

அதே நேரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் தரமோ இன்னும் அதலபாதாளத்தை நோக்கிச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ள நோட்டீசில், டெட் ((TET)) தேர்வில் ஏன் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் டெட் தேர்வை கூட எழுதாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிபிஎஸ்.இ பள்ளியில் படித்தால் நீட் தேர்வு எளிதாக எழுதலாம் என்று அனைவரும் நினைப்பதால் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் மாணவர்களும் சிபிஎஸ்.இ பள்ளிகளை தேடிச்செல்வதால் மெட்ரிக் பள்ளிகள் பல குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்த தள்ளாட்டத்திலும்,  400க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இத்தைகைய பள்ளிகளுக்கு வருகிற 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளாதால் இன்றுவரை அங்கீகாரம் இல்லாமல் மாணவர் சேர்க்கையை தடையின்றி அப் பள்ளிகள் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது

அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட எப்போதும் கூடுதலாக வசூலிப்பதையே வழக்காமாக வைத்திருக்கும் தனியார் பள்ளிகளில் தேர்தல் பறக்கும் படை போல அதிரடியாக புகுந்து அதிகாரிகள் சோதனை நடத்தினாலே கணக்கில் வராத லட்சகணக்கான ரூபாயை கைப்பற்றலாம் என்கின்றனர் கட்டண கொள்ளையால் பாதிக்கப்பட்ட பெற்றோர்.

அரசு நிர்ணயித்த கட்டணம் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் தாங்கள் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் பெற வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அரசு தங்கள் பள்ளிகளில் உள்ள வசதியை நேரில் ஆய்வு செய்து கூடுதலாக உயர்த்தி ஆணையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்கள் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 25 சதவீதம் கட்டணத்தில் மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை இதுவரை வழங்கப்படாமல் இருப்பதால் புதிதாக மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நீடிப்பதாக தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளை www.tnmatricschools.com என்ற இணையத்திலும், சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்.இ மண்டல அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகள் குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம். அங்கீகாரம் இல்லாமல், பி.எட் கல்வி முடிக்காத ஆசிரியர்களை கொண்டு இயங்கும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்த்துவிடுவது நல்லது என்கின்றனர் கல்வியாளர்கள்.