​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏசியில் தீப்பிடித்து கோர விபத்து

Published : May 15, 2019 9:46 AM

ஏசியில் தீப்பிடித்து கோர விபத்து

May 15, 2019 9:46 AM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில், உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். 

திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ராஜீ. இரும்பு பட்டறை உரிமையாளரான இவர், நேற்றிரவு தனது மனைவி கலைச்செல்வி மற்றும் மகன் கெளதம் ஆகியோருடன் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் மூத்த மகனான அதிமுக பிரமுகர் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி காயத்ரி
ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில், அதிகாலை 3 மணி அளவில் அசந்து உறங்கிய போது ராஜீயின் அறையில் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. படுக்கை விரிப்பு, மெத்தை, தலையணை என அனைத்திலும் தீப்பற்றவே, மூவரும் அலறியுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அறைமுழுவதும் தீப்பிடித்து புகை மண்டலம் சூழவே அவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கோவர்த்தனனாலும், அனல் மற்றும் புகை காரணமாக அறைக்குள் நுழைய முடியவில்லை.
இதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் அறைக்குள் இருந்த மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்ட திண்டிவனம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கௌதமுக்கு இன்னும் 20 நாட்களில் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.