​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள்

Published : May 14, 2019 8:12 PM

நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள்

May 14, 2019 8:12 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ள விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடத் தொடங்கியுள்ளனர். 

மயிலாடுதுறை கோட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் பயிர் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கர்நாடகாவில் போதிய மழையின்மை காரணமாக காவிரியில் நீர் வரத்து பொய்த்தது.

இதையடுத்து, விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு, குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நிலங்களை உழுது சீர்படுத்தி, பாய் நாற்றாங்கால் விட்டு, நடவு நட்டு ஆரம்பகட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது எதிர்பாராத இழப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் விவசாயிகள். எனவே குறைவான அளவு தண்ணீர் கிடைத்தாலும் இழப்பை ஏற்படுத்தாத பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடுவதாகக் கூறுகின்றனர்.

மயிலாடுதுறை, குத்தாலம் மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி போன்ற கிராமங்களில், பெரும்பாலான விவசாயிகள் பாராம்பரிய நெல்ரகங்களான மாப்பிள்ளை சம்பா, அறுபதாங் குறுவை, பொம்மி உள்ளிட்ட பல்வேறு இயற்கை நெல் ரகங்களை பயன்படுத்தி குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.

இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால் பெரும் இழப்புகளை தவிர்க்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முழுக்க முழுக்க நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளதாகக் கூறும் விவசாயிகள், நடப்பாண்டுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து, விவசாய இடுபொருட்களை மானிய விலையில் வழங்கி விவசாயிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

image

பெருவெள்ளமோ, கடும் வறட்சியோ எந்த சூழலிலும் விவசாயத்தை கைவிடமாட்டோம் என்று கூறும் விவசாயிகளுக்கு அரசு துணை நின்று அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.