​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்

Published : May 14, 2019 7:59 PM

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்

May 14, 2019 7:59 PM

கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா பங்கேற்ற பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்தது. கற்கள் வீசப்பட்டு, வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் பாஜக சார்பில் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.

வித்யாசாகர் கல்லூரி அருகே அமீத்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திரிணாமுல் கட்சியினர் கறுப்புக்கொடிகளைக் காட்டினர். திடீரென பேரணியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.
இதையடுத்து அங்கு திரண்டிருந்தவர்கள்மீது பா.ஜ.க.வினர் கற்களை வீசியும், கட்டைகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

கல்வீச்சில் அமித் ஷாவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீஸார் அவரை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால், பேரணி பாதியிலேயே முடிந்தது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தம்மைத் தாக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். மம்தா பானர்ஜி திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும்,
வன்முறையாளர்களைத் தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் வன்முறைக்கு மம்தா தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. மம்தா பானர்ஜி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி, பாஜகவினர் இன்று டெல்லியிலும் கொல்கத்தாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

கொல்கத்தா வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். வங்கத்தின் மரபின் மீது கை வைத்தால் தன்னை விட ஆபத்தானவர் யாருமில்லை என்றும் பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.