​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி சாம்பியன்

Published : May 13, 2019 6:12 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி சாம்பியன்

May 13, 2019 6:12 AM

ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களும், டிகாக் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியின் பந்து வீச்சால் சீரான இடைவெளியில் மும்பை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20வது ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியின் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டூபிளசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிகுந்த பொறுப்புணர்வுடன் அதே நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசினார். 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே களம்இறங்கிய தோனி இரண்டே ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் மட்டுமே சென்னை அணிக்கு தேவைப்பட்டபோது, மலிங்கா நிதானமாக பந்துகளை வீசினார். 80 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் ரன்அவுட் ஆனதால் திருப்பம் ஏற்பட்டது.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மலிங்கா வீசிய பந்தில் தாக்கூர் ஆட்டமிழந்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசளிக்கப்பட்டது. மும்பை அணிக்கு 28 கோடி ரூபாயும், சென்னை அணிக்கு 14 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.