​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
27 குழந்தைகளை கொல்லிமலை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கியுள்ளனர்

Published : May 11, 2019 6:18 PM

27 குழந்தைகளை கொல்லிமலை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கியுள்ளனர்

May 11, 2019 6:18 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் அவற்றில் 27 குழந்தைகள் கொல்லிமலை மலைவாழ் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 30 குழந்தைகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அதிலும் 27 குழந்தைகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மூலம் கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகளை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் கண்டறிந்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தைகளை விற்றவர்களிடம் எந்த காரணத்திற்காக குழந்தைகள் விற்கப்பட்டனர்? இடைத்தரகர்களால் மிரட்டப்பட்டோ நிர்பந்தப்படுத்தப்பட்டோ குழந்தைகள் விற்கப்பட்டனரா? என்பவை உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் என்ன விலை கொடுத்து குழந்தைகள் வாங்கப்பட்டன? உண்மையில் குழந்தை இல்லாத காரணத்தால் தான் விலை கொடுத்து வாங்கப்பட்டதா? என விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இடைத்தரகர்கள் மூலம் வாங்கப்பட்ட குழந்தைகள் அவரவர்களிடம் தான் உள்ளனரா? குழந்தைகளை அவர்கள் சரியான முறையில் வளர்த்து வருகிறார்களா ? என்பவை உள்ளிட்ட விவரங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொல்லிமலை, சேந்தமங்கலம், இராசிபுரம் பகுதிகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு பதிவேடுகள் கடந்த 13 நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட அறிக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பின்னர், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், அருள் சாமி, பர்வீன் , நிஷா, சாந்தி ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.