இந்தியாவில், ‘ஜாக்குவார் லேண்ட் ரோவர்’ கார் விற்பனை கடந்த மாதம் 13.3 சதவீதம் சரிந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஜாக்குவார் லேண்ட் ரோவர் பன்னாட்டு கார் நிறுவனத்தின் கார்களை, இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஜேஎல்ஆர் காரின் கடந்த மாத விற்பனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் இந்த காரின் விற்பனை 13.3 சதவீதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாத ஜேஎல்ஆர் கார் விற்பனையை ஒப்பிடும்போது, லேண்ட்ரோவர் கார் விற்பனை 13.3 சதவீதமும், ஜாக்குவார் கார் விற்பனை 13.7 சதவீதமும் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் சீனாவில் ஜேஎல்ஆர் கார் விற்பனை 45.7 சதவீதம் சரிந்ததாக குறிப்பிட்டுள்ள நிறுவனம், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் இவ்வகை கார்களின் விற்பனை முறையே 12.1 சதவீதம் மற்றும் 9.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தங்களுக்கு கடினமான மாதமாக இருந்தாலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என ஜேஎல்ஆர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பெலிக்ஸ் பிராட்டிகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.