​​ வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதால் புதியவனை கொன்றதாக கைதான முன்னாள் கார் ஓட்டுனர் வாக்குமூலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதால் புதியவனை கொன்றதாக கைதான முன்னாள் கார் ஓட்டுனர் வாக்குமூலம்

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதால் புதியவனை கொன்றதாக கைதான முன்னாள் கார் ஓட்டுனர் வாக்குமூலம்

Feb 09, 2018 7:18 PM

AIOBC ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜே.கே. புதியவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் கார் ஓட்டுநர் பாஸ்கரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் .

அனைத்திந்திய பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு ரயில்வே தொழிலாளர் சங்கமான AIOBC பொதுச்செயலாளராக இருந்தவர் ஜே.கே.புதியவன். சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் உள்ள ஷெல் கம்பெனி அருகே இவரது வீடு உள்ளது. புதியவனிடம் ஓட்டுநராக பணியாற்றிய பாஸ்கரன் என்பவர் தனது நண்பர் ஆனந்துடன் காலை புதியவன் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வந்திருந்தவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் புதியவனை முகம், கண், வாய், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் புதியவன் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர் புதியவனை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கும் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் புதியவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

புதியவன் கொலை தொடர்பாக ஐ.சி.எஃப். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பாஸ்கரன் மற்றும் ஆனந்த் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன் புதியவனிடம் பாஸ்கரன் ஓட்டுநராக பணியாற்றிய போது ரயில்வேயில் பணிவாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதற்காக 5 லட்ச ரூபாயை புதியவன் தன்னிடமிருந்து பெற்றதாக பாஸ்கரன் கூறியுள்ளார்.

ஆனால் வேலை கிடைக்காததால் பணத்தை திரும்பக் கேட்ட போது ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே திரும்ப தந்துள்ளதாகவும் எஞ்சிய தொகையை தராமல் தன்னை மிரட்டியதாகவும் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். புதியவனை எச்சரிப்பதற்காக ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் ஆனால் அங்கு ஏற்பட்ட கைகலப்பில் கொலை செய்து விட்டதாக பாஸ்கரன், ஆனந்த் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.